dcsimg

வால் காக்கை ( Tamil )

provided by wikipedia emerging languages

வால் காக்கை (Rufous Treepie அல்லது Dendrocitta vagabunda) என்பது காக்கைக் குடும்பத்திலுள்ள பறவைகளுள் ஒன்று. இது அரிகாடை என்றும் முக்குறுணி என்றும் மாம்பழத்தான் குருவி என்றும் கொய்யாப் பழத்தான் என்றும் அழைக்கப்படும்[2]. நீண்ட வாலும் உரத்த இசைக் கூப்பாடும் (கோகீலா ... கோகீலா... என்ற தொனியில் இருக்கும்) இதன் தெளிவான அடையாளங்கள். வேளாண் இடங்களிலும் நகர்ப்புறத் தோட்டங்களிலும் தென்படும் இப்பறவை காக்கையைப் போலவே ஒரு அனைத்துண்ணி. இப்பறவைக்கு விஞ்ஞான ரீதியாக அளிக்கப் பட்டுள்ள பெயர் டென்றொசிட்டா வேகபண்டா (Dendrocitta vagabunda). இதன் பொருள் மரங்கள் இடையே அலைபவன் (Wanderer amongst trees) என்பதாகும்.

தோற்றமும் கள இயல்புகளும்

Dendrocitta vagabunda -Kerala, India-8a.jpg

காக்கையைப் போன்ற அலகு, கருந்தலை, மஞ்சட்பழுப்பு (சிவலை) நிறவுடல், வெள்ளைப் பட்டைகளுள்ள இறக்கை, கருமுனை கொண்ட சாம்பல் நிற வால் உடைய பறவை.[3] மைனாவின் அளவை ஒத்திருக்கும், ஆனால் வால் மட்டும் 30 செ.மீ நீளம் உடையது. ஆணும் பெண்ணும் ஒரே அளவும் தோற்றமும் கொண்டவை. ஏற்றவிறக்கத்துடன் கூடிய பறப்பு - இறக்கைகளை விரைவாக அடித்து அதனைத் தொடர்ந்து இறக்கைகளையும் வாலையும் விரித்த வண்ணம் சிறு நழுவிச் செல்லும் இயக்கம் - இப்பறவையை அடையாளங் காட்ட உதவும்.[4]

பழக்கங்கள்

மரங்களடர்ந்த கிராமச்சூழல், புதர்ச்செடிகள் மண்டிய இடங்கள் தவிர நகர்ப்புற வீட்டுத் தோட்டங்களிலும் சத்தமிட்டுக் கொண்டே சோடியாகவோ குடும்பமாகவோ வருகின்றன. ரி-ரி-ரி என்ற கரகரப்பும் வெண்கலத்தின் இனிய ஓசை கலந்த குரலிலும் (கோகீலா-கோகீலா) இவற்றின் கூப்பாடு பலவாறிருக்கும்.

உணவு

காக்கையைப் போல அனைத்துண்ணி; விரும்பி உண்பது பழங்கள், பூச்சி, பல்லி, தவளை, பூரான், பிற பறவைகளின் முட்டைகள் - ஏன் - பிணம் கூடவும் இதற்கு உணவாகும். கூட்டமாகவோ பிற வேட்டையாடும் பறவைகளுடன் சேர்ந்தோ இவை வேட்டையாடப் போவதைக் காண முடிகிறது.[4]

கூடு கட்டுதல்

பெப்ருவரி முதல் சூலை வரை - குறிப்பாக, மார்ச்சு முதல் மே வரை இதன் கூடு கட்டும் காலம். நான்கு முதல் ஐந்து முட்டைகள் இடப்படுகின்றன. காக்கையைப் போன்றே கூடு கட்டும், குஞ்சு பொரிக்கும் தருணங்களில் நெருங்குபவரின் தலையைச் சுற்றி சுற்றி வந்து தாக்க வரும்.

ஒலி எழுப்புதல்

இந்தப் பறவை பல விதமான ஒலிகளை எழுப்ப வல்லது. அவற்றில் சில காதுக்கு மிக இனிமையானதாகவும், சில சாதாரணமானதாகவும் சில நாராசமானதாகவும் இருக்கும். இது சில வினாடிகள் இறக்கையை அடித்துக் கொண்டு நேர் கோட்டிலும், பின்னர் சிறிது தூரம் இறக்கையை அடிக்காமல் விரித்து வைத்துக் கொண்டு அதே நேர் பாதையிலும் பறக்கும். திடீரென சற்று தூரம் கீழ் நோக்கிச் சென்று பின் இறக்கைகளை அடித்துக்க் கொண்டு பழய நேர்கோட்டுப் பாதையை அடைந்து முன் போலவே பறக்கும்.

மேற்கோள்கள்

  1. "Dendrocitta vagabunda". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2009).
  2. பக்கம் 100, பறவைகளும் வேடந்தாங்கலும், மா. கிருட்டிணன், தொகுப்பாசிரியர்: பெருமாள் முருகன், காலச்சுவடு பதிப்பகம்
  3. மா. கிருஷ்ணன் - தமிழிணையப் பல்கலையின் கலைக்களஞ்சியத்திலிருந்து
  4. 4.0 4.1 The Book of Indian Birds - Salim Ali p.223
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

வால் காக்கை: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

வால் காக்கை (Rufous Treepie அல்லது Dendrocitta vagabunda) என்பது காக்கைக் குடும்பத்திலுள்ள பறவைகளுள் ஒன்று. இது அரிகாடை என்றும் முக்குறுணி என்றும் மாம்பழத்தான் குருவி என்றும் கொய்யாப் பழத்தான் என்றும் அழைக்கப்படும். நீண்ட வாலும் உரத்த இசைக் கூப்பாடும் (கோகீலா ... கோகீலா... என்ற தொனியில் இருக்கும்) இதன் தெளிவான அடையாளங்கள். வேளாண் இடங்களிலும் நகர்ப்புறத் தோட்டங்களிலும் தென்படும் இப்பறவை காக்கையைப் போலவே ஒரு அனைத்துண்ணி. இப்பறவைக்கு விஞ்ஞான ரீதியாக அளிக்கப் பட்டுள்ள பெயர் டென்றொசிட்டா வேகபண்டா (Dendrocitta vagabunda). இதன் பொருள் மரங்கள் இடையே அலைபவன் (Wanderer amongst trees) என்பதாகும்.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்